தூங்கட்டும் துப்பாக்கிகள்
பிஞ்சுகள் மனதில் நஞ்சு..,
ஏடெடுத்து பயிலும் காலம் மாறி,
ஏங்குகின்றன எந்திரத்தை ஏந்திசெல்ல!
இளைஞர்களின் உள்ளத்தில்
இடிமுழக்கம்!
காதலுக்கு கூட
தூதாக துப்பாக்கியா!
இனியாவது தூங்கட்டும் துப்பாக்கிகள்!
வன்முறையின்
வாயிலிலே
வெறியோடு சிரிக்கின்றன
துப்பாக்கி பூக்கள்...!
கண்ணிமைக்கும் நேரத்தில்,,
எல்லையிலே
கன்னிவெடியோடு
கரம் கோர்க்கின்றன துப்பாக்கிகள்!
எதிரிகளை
அழிக்கவா?
பெருக்கவா?
வினாவிற்கு விடையாக
இனியாவது தூங்கட்டும் துப்பாக்கிகள்!
தீவிரவாதிகளை ஒழிக்க!
தீவிர வாதம்
செய்கிறார்கள்...
ஆயுதத்தை
ஆயுதத்தால்
அழிப்போமென்று!
அகிம்சையை போதித்த
அண்ணல் காந்தியின்
இதயத்தை துளைத்தது
கோட்சேவின் துப்பாக்கி!
அன்னை இந்திராவின்
உடலை சல்லடையாக்கிய
பாதுகாவலனின் துப்பாக்கி!
பெனசீர் புட்டோவையும்
விரட்டியதே...
அய்யகோ..!
இவ்வவலம்
தொடராமல்
தூங்கட்டும் துப்பாக்கிகள்!
No comments:
Post a Comment